தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் மின் கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் மின் விபத்து நடக்கும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் வடகரை தென்கரை என இரண்டு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின் வயர்கள் பின்னி பிணைந்து பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்றது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் மின் வயர்கள் குழந்தைகளுக்கு கை எட்டும் அளவில் இருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனைத்தொடர்ந்து மழை மற்றும் பலத்த காற்று வீசினால் அப்பகுதியில் மின் துண்டிப்பு ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சனையினால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். முக்கியமாக தென்கரை கடைவீதிகளில் மற்றும் முக்கிய சாலைகளில் இதுபோன்ற சூழல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சீர் செய்யும் நடவடிக்கை எடுத்து, மின்கம்பங்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.