சொத்து தகராறு காரணமாக எலக்ட்ரீசியனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்டசீமனூர் பகுதியில் சுகுமார் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை காரணமாக சுகுமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சில நபர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சுகுமார் தனது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் சொத்து பிரச்சனையில் தொடர்புடைய நபர்கள் அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
அப்போது கோபம் அடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த கட்டை மற்றும் கம்பால் சுகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் படுகாயமடைந்த சுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுகுமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.