எலக்ட்ரீசியனை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்லானி காலனியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகானந்தம் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவருக்கு ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்து இருந்தார். அதை வசூல் செய்வதற்காக வி.ஜி.ராம் நகரில் உள்ள சிவா வீட்டிற்கு முருகானந்தம் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்தது. இதனால் முருகானந்தம் சிவா மனைவியின் தோழி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் மீண்டும் விசாரிக்க வந்ததால் இதுகுறித்து சிவா மனைவியின் தோழி அவரது கணவர் சாந்து முகமதுவிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாந்து முகமது முருகானந்தம் வீட்டிற்கு சென்று அவரை வெளியே வரச்சொல்லி தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாந்து முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகானந்தத்தை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகானந்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.