Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மின் திருத்த சட்டத்தை ஏற்போம் – அமைச்சர் தங்கமணி!

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மின் திருத்த சட்டத்தை ஏற்போம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது.மேலும் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும்.

இதனால் மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும். மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இதுவரை தமிழகம் மற்றும் சில மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் இந்த சட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இந்த சட்டத்தில் திருத்தும் வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கமணி, உதய் திட்டத்தை மாற்றங்களுக்கு பிறகே ஏற்றதை போல் விவசாயம், விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மத்திய அரசின் மின் திருத்த சட்டத்தை தமிழக அரசு ஏற்கும் என கூறியுள்ளார். இலவச மின்சாரம் ரத்து என கூறி போராட்டம் நடத்துபவர்கள் அரசியலுக்காகவே போராட்டம் நடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |