புதுச்சேரியில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் கட்டண வசூல், மின் கணக்கிடும் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது. அதோடு பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் வெட்டும் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மின்சார துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரித்து இருந்தார். இருப்பினும் மின்துறை ஊழியர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டம் கூடியது.
இதைத்தொடர்ந்து மின்சார துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மின்சார துறை ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதியளித்ததால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக கூறினார். மேலும் 5 நாட்களாக நடைபெற்ற போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.