வீடுகளில் மின்சார கட்டணம் கணக்கிடுவதில் மின்சார வாரியம் நூதன மோசடியில் ஈடுபடுவதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் 150 ரூபாயும், அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20-ம் சேர்த்து மொத்தமாக ரூ.170 வசூலிக்கப்பட்டு வருகின்றது.
அதுவே ஒருவர் 510 யூனிட்டுகள் பயன்படுத்தினால் முதல் 100 யுனிட்டுகள் இலவசம். ஆனால் அதற்கு மேல் உள்ள 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5க்கு பதிலாக ரூ.3.50 ஆக அதிகரித்து ரூ.350 என்று கணக்கில் கொள்ளப்படும். இதையடுத்து 201-500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.4.60 என்ற வீதத்தில் அதிகரித்து ரூ.1,380 வசூலிக்கப்படும். 500-510 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.6.60 என்ற வீதத்தில் அதிகரித்து ரூ.66, நிலையான கட்டணம் ரூ.20 என்று மொத்தமாக ரூ.1,846 வசூலிக்கப்படும். நாம் அதிகமாக 310 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் முதலில் 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால் வரும் கட்டணத்தை விட ரூ.1,676 அதிகமாக வந்துவிடும்.
இந்நிலையில் மின்சார கட்டணம் வசூலிப்பதில் நூதன மோசடி நடைபெறுவதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கோபி என்பவர் கூறுகையில், “இந்த முறை எங்கள் பகுதியில் வசித்து வரும் பலருக்கு வழக்கத்தை விட குறைவான மின்சார கட்டணமே வந்துள்ளது. எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் கணக்கிடுவதால் அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? என்று தெரியவில்லை. ஒருவேளை, சராசரியாக வரும் அளவை விட குறைவான ரீடிங்கை இந்த மாதம் எடுத்து விட்டு, அடுத்து வரும் மாதங்களுக்கு சேர்த்து கணக்கிட்டால் 500 யூனிட்டை தாண்டி விடும்.
அப்படியானால் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டி வருவதுடன், 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தியதற்கான டெபாசிட் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியது இருக்கும்” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து மின்சாரவாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அப்படி ஏதும் மோசடியாக கணக்கிடுவதில்லை. சரியான முறையிகணக்கிடும் பணிகள் நடை பெறுகின்றது. மோசடி நடைபெறுவதாக தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.