வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுக்காமல் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக வந்த குறுஞ்செய்தியை வைத்து மின்சாரத்தை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அழகாபுரி நகரில் வசித்து வருபவர் ஜெயலக்ஷ்மி. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென செட்டிபாளையத்தில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டுள்ளார். அதற்கு அவரிடம் மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெயலக்ஷ்மி கடந்த 14ஆம் தேதி மின் இணைப்பிற்கு இணைய வழி மூலமாக விண்ணப்பித்துள்ளார். அதற்காக 2,818 ரூபாயை முன் பணத்தொகை ஆகவும் செலுத்தியுள்ளார்.
வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் கடந்த 21ஆம் தேதி ஜெயலக்ஷ்மிக்கு இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி மின்வாரிய மின்வாரியத்தில் இருந்து வந்துள்ளது. இதனால் ஜெயலக்ஷ்மி அதிர்ச்சி அடைந்து இதுவரை வழங்கப்படாத மின் இணைப்புக்கு 10 ரூபாயை மின் கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்தி ரசீது பெற்று, அதை ஆதாரமாகக் கொண்டு தனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின்சாரம் காணாமல் போய்விட்டது என இணையதளம் மூலம் திருப்பூர் மாநகர காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.