அமீரக அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் செல்போனில் மின்னணு முறையை பயன்படுத்தி விரைவில் பெற்றுக்கொள்ளலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமீரகத்தில் வாழும் மக்கள் மற்றும் அங்கு குடியுரிமை பெற்று வசிக்கும் அனைவரும் கட்டாயம் அமீரக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அதன்படி அமீரக அடையாள அட்டையானது விசா விண்ணப்பித்து, அதன்பின் மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த பிறகு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் தனிநபர் அடையாளங்கள் இடம் பெற்றிருக்கும் வகையில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு வழங்கப்படுகிறது.
மேலும் இந்த அடையாள அட்டை கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதால் தற்போது மின்னணு முறையில் ஐ.சி.ஏ யூ.ஏ.இ ஸ்மார்ட் என்ற செயலி மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத. இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் மென்பொருளுடைய செல்போன்களில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அட்டையின் தகவல்களை தேவைப்படும் இடங்களில் கியூ.ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் அனைத்து அலுவலக செயல்பாடுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதோடு மட்டுமல்லாமல் இந்த அடையாள அட்டை உயர் தொழில்நுட்ப உதவியினால் தகவல்களை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக அமீரக அடையாள அட்டை கோரி விண்ணப்பிப்பவர்கள் இந்த மின்னணு முறையை பயன்படுத்தி விரைவில் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அமீரக குடியுரிமை ஆணையம் மற்றும் மத்திய அடையாளம் செய்து குறிப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.