பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை ஒற்றை கொம்பன் யானை கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றுவிட்டது. மேலும் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் இதன் ஒரு தந்தம் உடைந்து இருப்பதால் இதனை களப்பணியாளர்கள் ஒற்றைக்கொம்பன் என்றும், வனத்துறையினர் சங்கர் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த யானையை கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக வனத்துறையினர் முயன்றபோது, இந்த யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து தப்பித்து விட்டது. இதையடுத்து கேரள மாநிலத்திலுள்ள நிலம்பூர் சுற்றித்திரிந்த இந்த யானையை தமிழக-கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஒற்றைக் கொம்பன் யானை நீலகிரி மாவட்டம் சேரம்பாடிக்கு மீண்டும் திரும்பி விட்டது.
இந்த யானை மறுபடியும் வந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் இந்த யானை பிடிப்பதற்காக ஐந்து கும்கிகளை வரவழைத்துள்ளனர். இதனை பிடிப்பதற்காக அனுபவம் வாய்ந்த உதவி பாதுகாவலர்கள் தினேஷ் மற்றும் ராஜேஷ் தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் கூறும்போது, ஐந்து கும்கி யானையின் உதவியோடு ஒற்றை கொம்பன் யானையை பிடிக்க முயற்சி நடந்து வருவதாகவும், அதன்படி இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் அந்த யானையை முகாமில் வைத்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.