காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, ஓவேலி, தோட்ட மூலா, முண்டகுன்னு போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிகமாக காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக கூட்டமாக முகாமிட்டு வருகின்றது. இப்பகுதியில் அட்டகாசம் செய்து மூன்று பேரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் உள்ள மர கூண்டில் அடைத்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். அப்போது வனத்துறையினர் இந்த யானை பிடித்த போது ஒருசில காட்டு யானைகள் அவர்களை துரத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அந்த யானைகள் தான் தற்போது சேரம்பாடி பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் காட்டு யானை ஒன்று சேரம்பாடி குடியிருப்புக்குள் திடீரென புகுந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி வந்ததால் பொதுமக்கள் கதவுகளை பூட்டி விட்டு வீடுகளில் முடங்கி விட்டனர். இதனை தொடர்ந்து அந்த யானை குடியிருப்புகளை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டத்தில் புகுந்ததால் பொதுமக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, மூன்று பெயர்களை கொடூரமாக கொன்ற ஒற்றை யானையை வனத்துறையினர் பிடித்தபோது மகிழ்ச்சி அடைந்ததாகவும், இப்போது முகாமிட்டு காட்டு யானை குடியிருப்பு பகுதியை சுற்றி வருவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இந்த யானைகளால் பொதுமக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்னர் வனத்துறையினர் இதனை கண்காணித்து வனப்பகுதிக்குள் துரத்தி விட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.