சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சிறுத்தை, கரடி, காட்டு யானை, புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீரை தேடி நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதோடு தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டெருமைகள் தாக்கியதில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மஞ்சூர் கெத்தை சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அந்த பேருந்தை குட்டியுடன் 4 காட்டு யானைகள் வழிமறித்து உள்ளன. இதனை பார்த்ததும் ஓட்டுனர் பேருந்தை பின் நோக்கி நகர்த்தியுள்ளார். இதனையடுத்து யானைகள் சாலையில் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் சத்தம் போட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் சென்றுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.