வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை சாலையில் தனது குட்டியுடன் உலா வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பலா மரங்களில் உள்ள பழங்களை உண்பதற்காக காட்டுயானைகள் அப்பகுதிக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் அங்கும் இங்கும் நடந்து சென்றுள்ளது.
இந்த யானையை பார்த்த உடன் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை சிறிது தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தி விட்டனர். இந்த யானை சுமார் அரை மணி நேரம் அங்கும் இங்கும் அலைந்து பின் தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. இவ்வாறு யானை தனது குட்டியுடன் உலா வந்த காட்சியை அவ்வழியாக சென்றவர்கள் தங்கள் செல்போன்களில் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.