ஒற்றை காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திருச்சிபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலையில் ராஜப்பா தனது வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு பதுங்கி இருந்த ஒற்றை யானை திடீரென ராஜப்பாவை துரத்த ஆரம்பித்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜப்பா அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் யானை விடாமல் அவரை துரத்தி சென்று தனது கால்களால் மிதித்து உள்ளது.
இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.