கணவன் மனைவியை காட்டு யானை தாக்கியதால், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அந்த முடிவின்படி, இருவரும் நாமக்கலில் இருந்து பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து ஆலாந்துறை பகுதியில் உள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா உள்ளனர்.
அதன்பின் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் ஊருக்குத் திரும்புவதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருவரும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பேருந்து நிறுத்தத்தின் பின்னால் இருந்து திடீரென ஒரு யானை வந்ததை அறிந்த தம்பதிகள் அங்கிருந்து ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த 2 பேரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் யானை தாக்கி விட்டது. இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து யானையை விரட்டி அடித்தனர். அதன்பின் பலத்த காயமடைந்து கீழே விழுந்த இரண்டு பேரையும் மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், கணவன் மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.