குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாயியை கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் நீண்ட நாட்களாக 3 காட்டு யானைகள் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் ராமாபுரம், கோபசந்திரம், பீர்ஜெபள்ளி போன்ற கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிபள்ளி கிராமத்தில் வசித்து வந்த ராஜப்பா என்ற விவசாயியை காட்டுயானை மிதித்து கொன்றதோடு, 2 பேரை தாக்கி கொன்று விட்டது. மேலும் காட்டு யானை தாக்கியதில் இதுவரை நான்கு பேர் படுகாயம் அடைந்ததால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கிராமத்திற்குள் விவசாயியை கொன்ற காட்டு யானை மீண்டும் புகுந்து அப்பகுதியில் உள்ள கொய்யா தோட்டத்தில் உள்ள பழங்களை பறித்து தின்று கொண்டிருந்தது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் சரவணன், சுகுமார் போன்றோர் 3 ரவுண்டு மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி 16 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையை பிடித்து விட்டனர். அதன்பிறகு வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் பிரபு முன்னிலையில் காட்டு யானையை லாரியில் ஏற்றி உரிகம் அருகே இருக்கும் உகுனியம் வனபகுதிக்குள் காட்டு யானையை விட்டு விட்டனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட அந்த யானையை 10 பேர் கொண்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை பிடித்ததால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.