காட்டு யானைகள் அதிகளவில் நடமாடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாரம் அண்ணாநகர், சூண்டி, முல்லைநகர், மரப்பாலம், பாலவாடி போன்ற இடங்களில் காட்டு யானை நடமாட்டமானது அதிகளவு உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து காட்டு யானைகள் அதிகம் சுற்றித்திரியும் அப்பகுதிகளில் அந்த யானைகள் பொதுமக்களின் வீடுகளையும் முற்றுகையிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர். இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வெளியே வந்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.