உயர் மின் அழுத்தம் தாக்கி யானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் தென்னமநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுச்சாமி. இவர் குளத்தேரிப் பகுதியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் போது யானை அல்லது காட்டுப்பன்றிகளிடமிருந்து நெற்பயிரை காப்பாற்ற தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் இருந்து 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு யானைகள் வெளியேறியது. அவை சுமார் இரவு 12 மணிக்கு ஆறுச்சாமியின் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு பயிரிட்டு இருந்த பயிர்களை தின்றது.
பின்பு 22 வயது மதிக்கத்தக்க யானை தோட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் அதன் கால் பட்டு நிலைகுலைந்து தடுமாறிக் கீழே விழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். பின்பு பொதுமக்கள் போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து யானையை காப்பாற்ற முயன்றனர். ஆனால் யானை பரிதாபமாக இறந்தது.
விவசாயிகள் தனது தோட்டத்தில் பேட்டரி அல்லது சூரிய ஒளியில் இருந்து எடுக்கப்படும் சாக் அடிக்க கூடிய சிறிய அளவில் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் ஆண் யானை உயர் மின்னழுத்தம் தாக்கி இறந்தது தெரிய வந்ததையடுத்து ஆறுச்சாமி தனது தோட்டத்தில் உயர் மின்னழுத்தம் பயன்படுத்தினாரா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். மின்வேலியில் சிக்கிய யானையை காண பலர் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.