400க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பக கரையோரத்தில் இருக்கும் ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு பெண் தொழிலாளியின் வீட்டை முற்றுகையிட்ட காட்டு யானை அவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதனால்அச்சத்தில் அந்தப் பெண் வீட்டில் பின்வாசல் வழியாக தப்பி ஓடிய பிறகு கிராம மக்கள் இணைந்து அந்த காட்டு யானையை விரட்டி அடித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் அங்கு பயிரிடப்பட்டுள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறும் போது, வனப்பகுதியில் பசுந்தீவனங்கள் கிடைக்காத காரணத்தால் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதாகவும், அதனை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.