வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரட்டு பாறை மற்றும் வால்பாறை பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் வால்பாறை காபி எஸ்டேட் பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற வால்பாறை அரசு கால்நடை டாக்டர் மருத்துவர் நிஷாந்த் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெய்சந்திரன், செல்வன் போன்றோர் இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அதன் பிறகு யானையின் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் பிற வனவிலங்குகள் தின்பதற்காக அங்கேயே விடப்பட்டது. ஆனால் அந்த யானையின் உடலில் இருந்து வனத்துறையினர் கோரைப் பற்களை மட்டும் எடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த காட்டு யானை இறந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனவும், இறந்தது 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் யானையின் இறப்பு குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.