வனத்துறையினர் ஊருக்குள் முகாமிட்டுள்ள யானையை மர குண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்த யானை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த காட்டு யானை மீது தீப்பந்தம் வீசியுள்ளனர். இதனால் காயமடைந்த யானை உயிர் இழந்து விட்டது. இந்நிலையில் வனத்துறையினர் இதேபோல் மசினகுடி பகுதியில் முகாமிட்டுள்ள யானைக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததால் அதனை நூதன முறையில் பழங்கள் கொடுத்து முதுமலைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்து விட்டது.
இதனால் அந்த யானை முகாமிட்டுள்ள பகுதியிலேயே புதிதாக மர கூண்டு அமைத்து யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ரிவால்டோ என பொது மக்களால் அழைக்கப்படும் யானை ஊருக்குள் முகாமிட்டு பழகியதால் வனப்பகுதிக்குள் செல்வதில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கு மூச்சு பிரச்சனை இருந்ததால் யானைக்கு பொதுமக்களால் அபாயம் ஏற்படும் என்று கருதி முதுமலைக்கு கொண்டுசெல்ல மேற்கொள்ளப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளது. எனவே அதனை மர கூண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மர கூண்டு அமைத்து பிடித்தபின் யானைக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.