ரயில் மோதி படுகாயமடைந்த ஆண் யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு அருகே தமிழக-கேரள எல்லையில் வாளையார் ஆறு இருக்கின்றது. இந்த ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக நள்ளிரவு 6 யானைகள் வந்துள்ளன. அதன்பின் தண்ணீர் குடித்துவிட்டு அதிகாலை 1:20 மணி அளவில் யானைகள் அருகில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளது. இந்த ரயில் எதிர்பாராதவிதமாக 28 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மீது மோதியதில் அந்த யானை தண்டவாளத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் தூக்கி வீசப்பட்டு உள்ளது.
இது குறித்து என்ஜின் டிரைவர் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின் தகவல் அறிந்த மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் வன அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர். அப்போது தலை மற்றும் பின் பகுதியில் பலத்த காயமடைந்த அந்த காட்டு யானை நடக்க முடியாமல் படுத்து கிடந்ததால் அதனை சுற்றி மற்ற 5 காட்டு யானைகள் நின்றுள்ளன. இதனால் வனத்துறையினர் அந்த 5 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு காயமடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.