புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக பழனி கோவிலில் இருக்கும் கஸ்தூரி என்ற யானைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தேக்கடியில் நடைபெறுவது வழக்கம். இந்த முகாம் 48 நாட்கள் நடக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் யானைகளும் இந்த முகாமில் கலந்து கொள்ளும். இந்த ஆண்டு வருகிற 8 ஆம் தேதி புத்துணர்வு முகாம் தொடங்க இருக்கிறது. கொரோனாவின் அச்சுறுத்தலால் தமிழக அரசு பல கட்டுபாடுகளை விதித்துள்ளது.
இதில் முகாமில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும், யானையுடன் வரும் பாகங்களுக்கும், வேன் டிரைவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனையில் கொரோனாவின் தாக்கம் இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முகாமிற்கு யானைகளை அழைத்து வரவேண்டும். யானையை அழைத்து வரும் லாரியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். மேலும் லாரியில் ஏற மறுக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்து வரக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்பேரில் பழனி கோவிலில் இருக்கும் யானை கஸ்தூரிக்கும், பாகன், உதவியாளர், டிரைவர் உட்பட 13 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிய வருகிறது. மேலும் முகாமிற்கு அழைத்து வரும் யானைகளை லாரியில் ஏறவும் இறங்கவும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகின்றது.