யானை தனது குட்டிகளுடன் சாலையை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளது. அதற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் மான், செந்நாய், சிறுத்தை, புலி, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகிறது. இப்பகுதியில் திண்டுக்கல் – பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் எப்போதும் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
மேலும் இந்த சாலையில் யானைகள் தனது குட்டிகளுடன் அதிகம் வலம் வருகின்றன. கடந்த சில மாதங்களாக தமிழக -கர்நாடக எல்லைப்பகுதியான காரைபள்ளத்தில் யானைகள் தனது குட்டிகளுடன் அடிக்கடி உலா வருவதும், அங்கே வரும் வண்டிகளை மறித்து கரும்பு தின்பதும், தீடிரென துரத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காரைப்பள்ளம் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஓட்டுநர் யானை தனது குட்டிகளுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டார். இதனால் சாலையின் இருபுறமும் வண்டிகள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு சாலையில் அங்குமிங்கும் திரிந்துவிட்டு யானை தனது குட்டிகளுடன் காட்டுக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகே வண்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.