யானைகள் புத்துணர்வு முகாமானது பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில் யானைகள் பங்கேற்க போகின்றன. இந்த முகாமானது வருகின்ற 8ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, யானைகள் முகாமில் அலுவலகங்கள், யானைகளுக்கான கொட்டடைகள், யானைகள் குளிப்பதற்கான சவர் மேடை மற்றும் யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை போன்றவற்றை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நாளை மதியம் 2 மணிக்குள் முகாமில் பங்கேற்கும் யானைகள் அனைத்தும் வரவேண்டும் என அந்தந்த கோவில் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாமில் பங்கேற்க போகின்ற அனைத்து இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகள் இன்னும் தெரியவரவில்லை. இந்த முகாமிற்கான தொடக்க விழாவில் அறநிலையத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, உள்ளாட்சித் துறை வனத்துறை அமைச்சர் என பலரும் பங்கேற்கின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் 29 வயதான கல்யாணி யானை இருக்கின்றது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக கால்நடை மருத்துவர் மகாலிங்கம் அந்த யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்ததோடு, ஆந்த்ராக்ஸ், கோமாரி நோய் தடுப்பு ஊசிகளையும் அந்த யானைக்கு செலுத்தியுள்ளார். அதன் பின் கால்நடை மருத்துவர் கல்யாணி யானை ஆரோக்கியமாக உள்ளதாக சான்றிதழ் வழங்கியுள்ளார். இதனால் கல்யாணிக்கு கோ பூஜை நடத்தப்பட்டு உதவி ஆணையர் விமலா தலைமையில் மேட்டுப்பாளையம் யானைகள் முகாமிற்கு அனுப்பப்படுகின்றது.