காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இவ்வாறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த தண்ணீர் தொட்டிகளில் நிரப்பி வைக்கப் பட்டிருக்கும் தண்ணீரை குடித்த காட்டு யானைகள் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்கின்றன. இதனையடுத்து ஒரு காட்டு யானை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் மெதுவாக நடந்து சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது அப்பகுதியில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.