பண்ணாரியம்மன் கோவில் அருகே காட்டு யானை அங்குமிங்குமாக அலைந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த கோவில் சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் யானைகள் தண்ணீரைத் தேடி ரோட்டை கடந்து சென்று வருகிறது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக் கொண்ட காத்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த ஒற்றை காட்டு யானை சிறிது நேரம் கழித்த பின்னரே அங்கிருந்து மெதுவாக நகர்ந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது யானையைக் கண்டால் வெகு தூரத்தில் நின்று கொள்ள வேண்டும். மேலும் யானை தண்ணீருக்காக மட்டுமே ரோட்டை கடந்து செல்கிறது. அதனால் அதன் அருகில் யாரும் செல்ல வேண்டாம் மீறி சென்றால் யானை மிதித்து விடும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.