ஆந்திராவில் ஆதரவற்ற சிறுமியின் மருத்துவ கனவை நினைவாக்க உதவுவதாக எம்எல்ஏ ரோஜா உறுதியளித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் பச்சப்பாளையம் பகுதியை சேர்ந்த புஷ்பகுமாரி, குழந்தைகள் நல குழுவின் ஆதரவில் இருந்து வருகிறார். நீட் தேர்வில் தகுதி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு புஷ்ப குமாரிடம் போதிய பணவசதி இல்லை.
இதனால் அவரது மருத்துவ கனவு சிதைந்து விடுமோ என்ற அச்சத்தில் குழந்தைகள் நலக்குழு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ரோஜாவின் அறக்கட்டளையை நாடியது. இதனால் உதவ முன்வந்த ரோஜா புஷ்ப குமாரியின் மருத்துவ கனவை நினைவாக்க உதவுவதாக நேரில் சந்தித்து உறுதியளித்தார். சிறுமியும் தனக்கு உதவ வந்த எம்எல்ஏ ரோஜாவிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.