நெல் விதைகள் முளைத்து வளருவதற்குள் மழை பெய்ய விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர் .
குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த மாதம் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தங்களது வேலையை தொடங்கி இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் உழவு பணிகள் நிறைவு பெற்று நெல் விதைகளை விவசாயிகள் விதைத்து வருகின்றனர்.
இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வருவதற்குள் அப்பகுதியில் விவசாயிகள் ஆற்றுத் தண்ணீரை விட மழை நீரை அதிகம் எதிர்பார்க்கின்றனர். எனவே மழை நீர் மூலம் தெளிக்கப்பட்ட விதைகள் எளிதாக செழித்து வளரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருவதால் நெல் விதைகள் முளைத்து வளருவதற்குள் ஏற்றவாறு மழை பெய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஆற்றில் வரும் தண்ணீர் பாசன வாய்க்கால் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.