பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ஊரகசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்தப்பல்லி ஊராட்சியில் 38 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஜல்லி மற்றும் தார் சாலையும், கொட்டாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மற்றும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போபோது சிறு பாலத்தின் நீளம், அகலம் அளவுகளையும், தடுப்பு சுவரின் உயரம், கட்டுமானப் பொருட்களின் தரம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து சின்னதாமல் செருவு ஊராட்சியில் 42 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை, பாலூர் ஊராட்சியில் 34 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுவரும் தார்ச்சாலை பணிகளையும் கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டுள்ளார். அதன்பின் தார் கலவை தரமாக இருக்கின்றதா என பரிசோதனை செய்து சாலையின் இருபுறங்களிலும் மழைக்காலங்களில் அரிப்பு ஏற்படாதவாறு தரமான சாலைகளை அமைத்து பணிகளை வெகுவிரைவில் முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சாத்கர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் இருக்கின்ற அரசு புறம்போக்கு இடத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் மரக்கன்றுகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நட்டுள்ளார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, உதவி கலெக்டர் ஆட்சியர் ஐஸ்வர்யா, பேரணாம்பட்டு தாசில்தார் கோபி, வருவாய் துறையினர் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.