காங்கேயநல்லூர்- ரங்காபுரம் வரை பாலாற்றின் குறுக்கில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. எனவே வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதனால் அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்படுத்தபடவில்லை. இதனையடுத்து மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 122 கோடி ரூபாய் மதிப்பில் 217 சாலை பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு தொடங்குவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்தத் திட்டங்களில் காங்கேயநல்லூரில் இருந்து ரங்காபுரம் பகுதியை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பது முக்கியமான திட்டமாக கருதப்படுகின்றது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்பின் காங்கேயநல்லூர்-ரங்காபுரம் வரை சாலை அமைப்பது குறித்து நிலம் அளவீடு பணி நடைபெற்றது. இதனை வேலூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில். வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நிலம் அளவீடு செய்யப்பட்டு கல் நடும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியபோது காங்கேயநல்லூர்- ரங்காபுரம் பாலாற்றின் மேம்பாலம் அமைக்கப்பட்டு சாலையும் அமைக்கப்பட இருக்கின்றது. இதனால் நிலம் அளவீடு செய்யப்பட்டு உரிமையாளருக்கு இழப்பீடு கொடுக்க 22 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆயத்தப் பணிகள் முடிவு பெற்றதும் இழப்பீடு தொகை வழங்கப்படும். இதனைதொடர்ந்து சாலை அமைப்பதற்கான மொத்த செலவு குறித்து கணக்கீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படும். அதன்பின்னர் சாலை அமைக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.