உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய அரசாங்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தகவல்களை வெளியிட ட்விட்டர் நிறுவனம் தவறிவிட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்தார். எனினும் ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் கணக்குகளில் சில போலியானதாக இருப்பதாக தெரிவித்தார். எனவே, அந்நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார்.
அது வரை, தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தக் கூடிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருந்தார். அதனைத்தொடர்ந்து சில நாட்களில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ட்விட்டர் நிறுவனம் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் தாக்கல் செய்திருந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ட்விட்டர் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிரான ஆபத்து நிறைந்த வழக்குகளை வெளியிடுவதற்கு தவறிவிட்டது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் மூன்றாம் பெரிய சந்தையாக திகழக்கூடிய இந்திய சந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய நாட்டின் சட்டத்தை ட்விட்டர் நிறுவனம் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுகளில் உண்மை பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான தகுந்த அறிவும், தகவல்களும் இல்லை என்று மறுத்திருக்கிறது.
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கடந்த 2021 ஆம் வருடத்தில் அறிவித்த விதிமுறைகளுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் கடந்த மாதத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனை குறிப்பிட்டு இந்திய அரசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தகுந்த தகவல்களை வெளியிட ட்விட்டர் நிறுவனம் தவறிவிட்டது என்று எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.