வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி ஜங்கமசமுத்திரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். நரிப்பாடி பகுதியில் தினேஷ்குமார் மற்றும் செல்வம் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் இருப்பதாவது படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த எங்களுக்கு ஆத்தூர் கோட்டில் கணினி ஆபரேட்டர் பணி வாங்கி தருவதாக சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். அதனை நம்பி நாங்கள் ஒவ்வொருவரும் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3 பேருக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அந்த நபருக்கு கொடுத்தோம். இதனையடுத்து பணி நியமன ஆணைகளை 2019-ஆம் ஆண்டு எங்களிடம் சம்பந்தப்பட்ட நபர் வழங்கினார்.
அதனை நாங்கள் 3 பேரும் ஆத்தூர் கோர்ட்டுக்கு எடுத்து சென்று கொடுத்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. அதில் நீதிபதி கையெழுத்து, நீதிமன்ற முத்திரையை போலியாக தயாரித்து பணிநியமன ஆணையை அந்த நபர் 3 பேரிடம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே கணினி ஆப்ரேட்டர் பணி நியமன ஆணை யாரும் கொடுக்கவில்லை என்று ஆத்தூர் கோர்ட்டில் இருந்த அலுவலர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதனால் எங்கள் 3 பேரை ஏமாற்றிய அந்த நபரிடம் கேட்டபோது அதற்கு அவர் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து விட்டார். ஆகவே போலியான பணி நியமன ஆணையை வழங்கிய அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று 3 பேரும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 3 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் முதன்மை நீதிமன்றத்திற்கும் சென்று புகார் மனுவை கொடுத்துள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.