சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலமாக போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அரசுடமையாக்க வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது.
இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது. கடந்த 2017ம் ஆண்டு ஆக. 17 ம் தேதி, ஜெயலலிதா நினைவு இல்லம் தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து நினைவில்லம் ஆக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதற்கென புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைத்து பணிகளை தொடங்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தலைவராக முதல்வரும், அமைச்சரும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேதா நிலையத்தையும், அதில் உள்ள பொருட்களையும் பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லத்தை இனி யாரும் உரிமை கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.