சென்னையில் அவசர பாஸ் வழங்கும் பணிகள் அடுத்த 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஓரடங்கில் தமிழக அரசு சில தளர்வுகள் அளித்துள்ளது.
அதன்படி அத்தியாவசிய கடைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 500ஐ நெருங்கி கொண்டிருகிறது.
இதனால் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் நாளை முதல் 29ம் தேதி வரை முதல்வர் பழனிசாமி முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மருந்து கடைகளை தவிர வேறு கடைகள் 4 நாட்களுக்கு திறக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் அவசர பாஸ் வழங்கும் பணிகள் அடுத்த 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் வெளியூர் செல்ல வழங்கப்படும் அவரச பாஸ் முறை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.