EMI தொடர்பான வழக்குகளுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறது .
கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி அன்று நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தியது. இதன் காரணத்தினால் தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆலைகள் என அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் கூட, முன்னதாகவே நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால், நாட்டில் பல்வேறு மக்களும் வேலை வாய்ப்புகளை இழந்து வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் வங்கி நிறுவனங்களோ வாங்கிய கடனை செலுத்தியே தீரவேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு வங்கி கடன் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தனியார் வங்கிகள் தெரிவித்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக ரிசர்வ் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வங்கிக் கடனை இஎம்ஐ (EMI) முறையில் ஆறு மாதத்திற்கு செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்கியது. இருப்பினும் கட்ட வேண்டிய மாத தவணை மீதும் வட்டி வசூலிப்பதாக ஆக்ராவை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையில் இந்த வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலைக்கு காரணம் மத்திய அரசின் பொது முடக்க உத்தரவு ஆகும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அதில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் வங்கி கடனை போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை தாங்கள் நினைவில் வைத்திருப்பதாகவும் மேலும் அதற்கான கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூட இயலும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் ‘மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி’ யிடமிருந்து உறுதியான பதிலை பெற்று இதற்கான உரிய முடிவினை செப்டம்பர் இரண்டாம் தேதி அதாவது இன்று எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.