சென்னை தரமணியில் எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியானது அமைந்துள்ளது. அதனை ஒட்டி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு போலீஸ் நிலையம், பஸ் நிலையம், பங்களா, குடிசை, பாலம் ஆகிய நிரந்தர அரங்கங்கள் இருக்கிறது. இதுதவிர்த்து நவீன இண்டோர் ஸ்டூடியோவும் உள்ளது. எனினும் கடந்த சில வருடங்களாக இங்கு பராமரிப்பு இல்லாததால் செட்டுகள் வீணானதுடன், படப்பிடிப்பு பகுதிகளில் புல், புதர்கள் முளைத்து இருக்கிறது.
இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக திரைத் துறையினரால் வைக்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு அரச இதை சீரமைக்க முன்வந்திருக்கிறது. முதற்கட்டமாக அடிப்படை வசதிகளை சீரமைக்க 5 கோடி ஒதுக்கி இருக்கிறது. இது தொடர்பாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது “சென்னை மாநகரப் பகுதி, தரமணியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இது சென்ற 10 வருட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தது. தற்போது அங்கே சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடிய அடிப்படையில், அதற்குரிய புனரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது. முதலில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு இருக்கிறது” என்று அவர் கூறினார்.