விலை உயர்ந்த செல்போனை வாங்க பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி நாடகமாடிய மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள மூங்கில்பட்டு ஊரில் விவசாயி அன்பழகன் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் அன்பழகனின் எதிர்வீட்டில் உதயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவ்வாறு எதிர்வீட்டில் வசிப்பதால் அன்பழகனின் 6 வயது மகனை உதயன் உதயன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து திருக்கனூர் காவல் நிலையத்துக்கு சட்டை கிழிந்தபடி உதயன் வந்தார்.
அங்கு உதயன் “திருக்கனூர் அய்யனார் கோவில் எதிரே நான் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் சிறுவனை என்னிடம் இருந்து கடத்தி சென்றுவிட்டதாகவும், ஒரு லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும்” காவல்துறையினரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சிறுவன் கடத்தப்பட்டதாக கூறிய இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு சிறுவனை, உதயன் அழைத்து சென்றது பதிவாகி இருந்தது. இதனால் உதயன் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டனர்.
அப்போது உதயனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தபோது அதில் ஒரு பெண் பேசியுள்ளார். அந்த பெண் பேசியதாவது “ஏம்பா குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு சென்றாயே ஏன் திரும்ப அழைத்து செல்ல வரவில்லை” என்று கேட்டுள்ளார். இதனை கேட்ட காவல்துறையினர் அந்த பெண்ணை குழந்தையுடன் போலீஸ் நிலையம் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணையில் “உதயன் திருக்கனூர் பகுதியில் கடையில் விலை உயர்ந்த செல்போனை பார்த்து அதன் விலையை கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து உதயன் தான் பணம் பறிக்க சிறுவனை கடத்திவிட்டு நாடகமாடியது” காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் சிறுவனை மீட்ட காவல்துறையினர் உதயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.