மின் கம்பத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் துணை மின் நிலையம் சார்பில் அப்பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இதில் மின்வாரிய ஊழியர்களான காளிராஜன், முருகேசன், விக்னேஸ்வரன், பிரேம்குமார், ஆனந்தராஜ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகேசனும், காளிராஜும் புதிதாக நடப்பட்ட ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி மின்கம்பிகள் இணைப்பதற்கு வசதியாக இரும்பு உபகரணங்களை பொருத்தி கொண்டிருந்தனர்.
அப்போது புதிய மின் கம்பத்தின் அடிப்பகுதி திடீரென முறிந்து விழுந்ததால் முருகேசனும், காளிராஜன் கம்பத்தோடு கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் விக்னேஸ்வரனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த காளிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் காயமடைந்த முருகேசன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்புதான் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.