டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கி திருமணமான வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் உலகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். உலகநாதன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உலகநாதன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி எதிரே வந்த டிப்பர் லாரிக்கு அடியில் விழுந்து விட்டார். இதனால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உலகநாதன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்ததும் பயத்தில் டிப்பர் லாரி டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உலகநாதனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் பொதுமக்கள் கோபத்தில் உலகநாதனின் உயிரை பறித்த டிப்பர் லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.