பழிவாங்கும் நோக்கத்தோடு தனியார் நிறுவன ஊழியரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவருக்கும் இடையே கோவில் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் ஸ்ரீதரை பீர் பாட்டிலால் குத்தி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தேடி வந்துள்ளனர்.
அப்போது ஸ்ரீதரின் அண்ணனான கமலக்கண்ணன் மற்றும் தங்கமுத்து போன்றோர் மணிகண்டனை சந்தித்து ஏன் ஸ்ரீதரை பீர் பாட்டிலால் தாக்கினாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது கோபமடைந்த அவர்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன்பின் படுகாயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கொலை செய்த குற்றத்திற்காக கமலக்கண்ணன் மற்றும் தங்க முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.