தேனி மாவட்டத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தவர் மீது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு கும்பக்கரை பகுதியில் உள்ள மின் கம்பத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.