ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பாலமு மாவட்டத்தில் தனுகி என்பவர் பேய் ஓட்டும் வேலையை செய்து வந்தார். சென்ற சில மாதங்களுக்கு முன் தனுகிக்கும் அவரது மகன் பல்ராமுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் பல்ராமின் இளைய மகன் திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து மகன் இறப்பிற்கு தந்தை தனுகி தான் காரணம் என பல்ராம் நினைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனுகி வெளியில் சென்று கொண்டிருந்தபோது, பல்ராமும் அவரது மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். அதன்பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தனுகியை அவர்கள் தாக்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து பல்ராமும் அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டனர். இதனிடையில் படுகாயமடைந்த தனுகியை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி தனுகி இறந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மூட நம்பிக்கை காரணமாகவே தந்தை தனுகியை பல்ராம் அடித்துக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது தலைமறைவாகவுள்ள பல்ராம் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.