மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள விராலிகாட்டூர் காலனியில் தனசேகரன்-செலம்பாயி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் காய்கறி வியாபாரத்தை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கீதா மகள் இருந்தார். இவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். கடந்த 16-ம் தேதி கீதா வீட்டில் இருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் “தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கீதா தனது தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அத்தை திட்டியதால் நான் வருத்தத்துடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் மாணவி தற்கொலை செய்யும் முன் என் சாவுக்கு தஞ்சையை சேர்ந்த 3 நபர்கள் தான் காரணம்” என்று எழுதி வைத்துள்ளது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இந்நிலையில் மாணவியின் அத்தையான தேவி மற்றும் 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தேவியையும், தஞ்சாவூரைச் சேர்ந்த 19 வயதான வாலிபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “தேவி தன் மகளுடன் சேரக்கூடாது என்று கீதாவை மிரட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீதா கோபியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தபோது அங்கு தஞ்சாவூரை சேர்ந்த வாலிபர்களும் பணிபுரிந்து உள்ளனர். அப்போது மாணவி கீதாவின் செல்போன் எண்ணை அந்த வாலிபர்கள் பெற்றுக்கொண்டனர். இதனால் வாலிபர்கள் செல்போன் மூலம் கீதாவை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்ததும்” விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த மேலும் 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.