தனது தங்கையை கடத்தி சென்று விட்டதாக கணவர் மீது மனைவி புகார் கொடுத்துள்ளதால் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க பகுதியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கணேஷ் யூமான்டல் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 15 வருடத்திற்கு மேலாக அப்பகுதியில் பானிபூரி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக தனது மனைவி மற்றும் மகனை தனது சொந்த ஊரான மேற்குவங்காளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு தனது மனைவி மற்றும் மகனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு கணேஷ் மட்டும் தனியாக சென்னை வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சரண்ராஜ் என்பவருடைய வீட்டை 7 ரூபாய் முன் பணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த அறையில் கணேஷ் யூமான்டலும் அவருடன் வேலை பார்க்கும் ஒரு சிறுவனும் தங்கி உள்ளனர்
இந்நிலையில் அந்த அறையில் மின்விசிறி மாட்ட வேண்டும் என்று கூறி சென்ற கணேஷ் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அந்த சிறுவன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து உள்ளான். அப்போது அந்த அறையில் கணேஷ் யூமான்டல் மற்றும் 18 வயதுடைய இளம் பெண் இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கணேஷ் யூமான்டலுடன் தற்கொலை செய்து கொண்ட அந்த இளம்பெண் அவருடைய மனைவியின் தங்கை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கணேஷ் யூமான்டலுக்கும் அவரது மனைவியின் தங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதால் தனது மனைவியே சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு கணேஷ் அந்த இளம்பெண்ணுடன் சென்னைக்கு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பிறகு கணேஷ்சின் மனைவி தன் தங்கையை கடத்தி விட்டதாக கணவர் மீது மேற்கு வங்காள போலீசில் புகார் அளித்ததால் அச்சத்தில் இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.