கொரோனா ஊரடங்கில் நான் மிகவும் ருசியாக சமைப்பதற்கு கற்றுக்கொண்டேன் என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் தங்களுக்கு பிடித்த செயல்கள் என குடும்பத்தோடு பொழுதை கழிக்கின்றனர். அந்த வகையில் தமிழ் மொழி சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ராஷி கன்னா. இவர் தெலுங்கு மொழி சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக உள்ளார்.
நடிகை ராஷி கன்னா கூறுவதாவது;
தற்போது கொரோனா ஊரடங்கால் நான் நன்றாக சமைப்பதற்கு கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார். ஓய்வு நேரத்தில் நிறைய விஷியங்களை கற்றுக்கொண்டேன். நான் என்ன கற்று கொண்டேன் என்பதை சினிமாவில் காட்ட இருக்கிறேன். எங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். எனக்கு சமையல் தெரியாது. அது குறித்த பழக்கமும் இல்லை.
எனது அம்மா நீ எப்போது சமைக்க கற்றுக்கொள்ள போகிறாய் என்று அடிக்கடி என்னிடம் கேட்பார். படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் அதை கற்று கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த ஊரடங்கு காரணமாக அம்மா என்னை விடுவதாக இல்லை. சமையல் அறைக்குள் கூப்பிட்டார். நானும் சும்மாதான் போனேன். ஆனால் இப்பொழுது சமைப்பதில் ஆர்வம் வந்து விட்டது.
விதம் விதமாக சமையல் செய்வதற்கு கற்றுக்கொண்டேன். அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டார். குடும்பத்தினர் அனைவரும் நான் சமைத்த உணவுகளை என் கையால் ருசித்து, ரசித்து சாப்பிடுகிறார்கள். இந்த ஓய்வில் பிடித்த இன்னொரு விஷயம் வீட்டில் எல்லோரும் சேர்ந்து கலகலவென சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இந்த ஊரடங்கில் எனக்கு கிடைத்த வரம் என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார்.