அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சர்வதேசப் போட்டிகளில் தான் எதிர்கொண்ட முதல் பந்தான ஆர்ச்சரின் பவுன்சரை அசால்ட்டாக சிக்ஸ் அடித்து எதிரணியை மிரளவைத்தார். 6 ஓவர் பவர்-பிளே முடிவில் இந்திய அணி, 45 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. இதுவே (45/1) இந்திய அணி இத்தொடரில் முதலில் பேட்டிங் செய்யும்போது பவர்-பிளேயில் எடுத்த அதிகப்பட்ச ஸ்கோராகும் (முதல் போட்டியில் 22/3, மூன்றாம் போட்டியில் 24/3).
நிதானமாக ஆடிய ராகுல் 14 (17) ரன்களில் ஸ்டோக்ஸின் பந்தில் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த அசத்திய கோலி, இன்று 1(5) ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னும் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த சூர்யகுமார், 28 பந்துகளில் தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
ஸ்கோர் சீராக அதிகரித்துவந்த நிலையில் 12.4 ஓவரில் இந்திய அணி 100-ஐ கடந்தது. அடுத்த ஓவரை வீசவந்த சாம் கரனின் முதல் பந்தை சிக்சர் அடித்து மிரட்டிய சூர்யகுமார், அடுத்த பந்தில் மாலன் கையில் கேட்ச் கொடுத்தார். மூன்றாம் நடுவர், பல ரீ-பிளேவிற்குப் பிறகும் சர்ச்சையான முறையில் அவுட் கொடுத்தார். சூர்யகுமார் குவித்த 58 ரன்களில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். சற்றுநேரம் அதிரடி காட்டிய பந்த் 30 (23), ஹர்திக் பாண்டியா 11 (8), ஸ்ரேயஸ் 37 (18) ரன்களில் அவுட்டாக இந்திய அணி 20 ஓவர்களில் 185/8 ரன்கள் எடுத்தது. இந்திய அணி கடைசி 4 ஓவர்களில் 57 ரன்களைக் குவித்ததென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளும் – ரஷித், மார்க் வுட், ஸ்டோக்ஸ், சாம் கரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 186ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்டலர் 9 ரன்னில் ஆட்டமிழக்க, டேவிட் மாலன் ( 14 ) பைர்ஸ்டோவ் ( 25 ) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.சிறப்பாக விளையாடிய ஜேசன் ராய் 40ரன்னிலும்,பெண் ஸ்டோக்ஸ் 46ரன்களும் எடுத்து அசத்தினர்.
ஏனைய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 20ஓவர்களில் முடிவில்,177ரன்களுக்கு 8விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் 8ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இந்திய அணி சார்பில் ஷர்டுல் தாகூர் 3விக்கெட்டும், ஹர்டிக் பாண்டியா, சஹர் தலா 2விக்கெட்டும்,புவனேஷ்குமார் 1விக்கெட்டும் எடுத்தனர். ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.