பணி நியமன ஆணை வழங்க கோரி பேரூராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆளூர் பேரூராட்சியில் சரத், மணிகண்ட பிரபு இருவரும் தற்காலிக மின் நிலை உதவியாளராக வேலை பார்த்து வருகின்றார்கள். இந்நிலையில் ஆளூரில் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் மீட்டர் ரீடிங் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்த ஒருவருக்கு மின் நிலை உதவியாளராக பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரத் மற்றும் மணிகண்ட பிரபு இருவரும் எங்களுக்கு வர வேண்டிய வேலையை ஏன் தண்ணீர் மீட்டர் பணியாளருக்கு கொடுத்தீர்கள் என்று செயல் அலுவலரிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு செயல் அலுவலர் சரியான பதில் கூறாததால் சரத் மற்றும் மணிகண்டன் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இரணியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரத் மற்றும் மணிகண்டனிடம் முறையான அனுமதி பெற்று தான் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே இப்பொழுது ஊரடங்கு காலம் என்பதனால் நீங்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்று காவல்துறையினர் கூறியதால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.