பயோ-பபுள் சூழலில் இருப்பதால் அதிலிருந்து மீண்டுவர எங்களுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி காண வாய்ப்பு முடிந்துவிட்டது. இந்த தோல்விக்கு பிறகு அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேட்டியின்போது கூறுகையில்,” உண்மையிலேயே சிறிது ஓய்வு தேவைப்படுகிறது .குடும்பத்தைப் பிரிந்து 6 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம் .அதோடு பயோ-பபுள் சூழலில் இருப்பதால் அதிலிருந்து எங்களுக்கு மீண்டுவர ஓய்வு தேவைப்படுகிறது . நன்றாக விளையாட வேண்டும் என்று மனதில் நினைத்தாலும், களத்தில் இறங்கும்போது அதைப்பற்றி சிந்திக்க முடியாது. அதேசமயம் உங்கள் கட்டுப்பாட்டில் பல விஷயங்கள் நடக்காது .பயோ-பபுள் சூழலில் இருப்பது , நீண்ட காலமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது ஆகியவை வீரர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இருந்தாலும் பிசிசிஐ நிர்வாகம் எங்களை நல்ல முறையில் வைத்திருக்க முயன்று வருகிறது . அதே சமயம் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் பெரும் தொற்று பரவி வருகிறது இதிலிருந்து பாதுகாக்க பயோ பபுள் சூழலில் இருக்கும்போது மனரீதியான அழுத்தத்தில் சில சமயம் சிக்கிவிடுகிறோம்என்றார் . மேலும் பேசிய அவர்,”நாங்கள் டாஸை இழந்தபோதே இரண்டாவது இன்னிங்சில் ஆடுகளம் மாறிவிடும் என்பதை நாங்கள் உணர்ந்தோம் .இதனால் பந்துவீச்சாளர்களை பாதிக்காத வகையில் நல்ல ஸ்கோர் அடிக்க பேட்ஸ்மேன்களிடம் கலந்து ஆலோசித்தோம் .அதேபோல் தொடக்கத்தில் பவர் பிளே ஓவரில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முற்பட்டன. ஆனால் நியூசிலாந்து அணி பவுலர்கள் ஸ்லோ-பால்களை அதிகம் வீசி ஆடுகளத்தின் தன்மையை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர் . இதனால் அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களை அடிப்பது கடினமாக இருந்தது “இவ்வாறு அவர் கூறினார்.