நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் எனது கணவர் மற்றும் குழந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தார் .
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி சத்யபிரியா. இவர் தனது ஆறு மாத குழந்தையுடன் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,’ நானும் எனது கணவரும் ஆறு மாத குழந்தையுடன் வசித்து வருகிறோம். அப்போது சம்பவ தினத்தன்று எனது தம்பி வினோத்குமார் ,அக்கா கணவர் ரகு மற்றும் அவருடைய தந்தை நாகராஜன் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து தொழில் பிரச்சினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டனர். இதில் மூவரும் சேர்ந்து எங்களை கட்டையால் தாக்கினர்.
அதோடு வீட்டில் உள்ள பொருட்களையும் வெளியில் இருந்த இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த எங்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கீழையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .இதனால் அவர்கள் மீண்டும் எங்களிடம் தகராறு செய்து வருகின்றனர். எனவே எங்களுக்கு உயிர் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் எங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தம்புராஜ் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.