மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் கிராமம் அன்னை தெரசா வீதியை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் முருகன் மீன்பிடி தொழிலாளர் ஆவார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று தொடுவாய் மாரியம்மன் கோவில் எதிரே முருகன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் .இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.மேலும் இது குறித்து திருமுல்லைவாசல் கிராம நிர்வாக அலுவலரான மோகனகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளனர் .இப்புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு முருகனின் உடலை அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர் .ஆனால் இவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நடந்த பேச்சுவார்த்தையில் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதன்பிறகு பேச்சுவார்த்தையில் உடன் ஏற்பட்டதால் இறந்தவரின் உடலை வாங்கிச் சென்ற உறவினர்கள் அடக்கம் செய்தனர். இச்சம்பவத்தால் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.